கோடை வந்தால் கொரோனா ஓடுமா? சூரியன் சுள்ளென்று அடித்தால் கொரோனா வராது என்பது சரியா?
இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் பயமுறுத்தும் ஒரு பிரச்சனை கொரோனா வைரஸ் தொற்று நோய். நாவல் கொரோனா வியாதிக்கு கோவிட் 19 என்று நாமகரணமும் செய்தாயிற்று.
சீனர்களும் , ஏன் உலகம் முழுவதுமே மிரண்டு கிடக்கும் இந்த வேளையில் , நம் நாட்டில் நிலைமையே வேறு. இங்கு தான் வெயில் காலம் தொடங்கியாயிற்றே , நமக்கு ஏன் கவலை என பலரும் பம்மாத்து பேசுவதை காண்கிறோம். ஆயிரத்து ஐநூறு பேருக்கும் மேல் இறந்திருக்கும் இந்த வேளையில் நம்மிடம் இருக்கிறது கைமருந்து “வெயில்” என ஒரு இருமாப்பு.
இந்தக்கட்டுரையில் சொல்ல வருவது இரண்டு கருத்துக்கள்.
முதலாவது வெயில் பற்றியது. வெயில் காலங்களில் ஃப்ளு (FLU)என்ற சளிக்கிருமி பரவுவது குறைகிறது. இது குறைய இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று சளிக்கிருமி (FLU) வெயில் வெப்பத்தால் அழியக்கூடியது. இது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது குழந்தைகள் வகுப்பறையில் கூடுவதலால் ஃப்ளு வைரஸ் எளிதாக பரவுகிறது. பொதுவாக நாம் வெப்ப மாதங்களில் கோடை விடுமுறை விட்டுவிடுவதால் பழக வாய்ப்பு குறைவு எனவே ஃப்ளு (FLU) பரவுவது குறைகிறது.
ஆனால் சில வருடங்கள் முன் கொரோனா கிருமி வைரஸ் போன்ற மெர்ஸ் (MERS) கிருமி, சவுதி அரேபியாவில் பரவிய போது கோடைகாலத்திலும் பலரையும் வாட்டியது ( 2019 வருடம் மார்ச் முதல் செப்டம்பர் வரை). இது போல் கொரோனாவும் கோடைகாலத்தில் பரவ வாய்ப்பு நிச்சயம் உள்ளது. சிங்கப்பூர் போன்ற வெப்பம் மிகுந்த நாடுகளில் கூட கொரோனா பரவியுள்ளது நாம் அறிந்ததே.
எனவே நமக்கு வெயிலால் விடுதலை என நாம் கவனமின்றி இருந்தால் நம்மை போல முட்டாள் இருக்க முடியாது.கவனம் மிக முக்கியம் இந்த கட்டுரையில் இரண்டாவது கருத்து இதுதான்.
கோடை வந்தாச்சு என இளைப்பாறி இறுமாந்து இல்லாமல் கொரோனா தடுப்பை துரிதமாக செவ்வனே செய்வோம்.
“கை கழுவுதல் முக்கியம். கை குலுக்குவதை விட்டு கை கூப்பி வணக்கம் சொல்வோம் கூட்டங்களைத் தவிர்ப்போம் கொரோனாவை வேறருப்போம் ”
டாக்டர். ரமேஷ் பாபு
குழந்தைகளுக்கான சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்
ரியோ மருத்துவமனை, மதுரை