antispetic measures taken at home are potentially harmful

cleaning is one thing. Antisepsis is totally different thing

 

மருத்துவ சோப்பு- மருத்துவ பெயிண்ட்-மருத்துவ பல்பு- மருத்துவ முத்தம்.

என்ன நடக்குது இந்த நாட்டிலே!!!
நேற்று நான் பார்த்த ஒரு விவகாரமான டிவி விளம்பரம் தான் இந்த கட்டுரையை எழுத தூண்டியது. இந்த விளம்பரம் நம்மை சுற்றியுள்ள கிருமிகளை அழிக்க ஒரு பல்பை விற்க எத்தனிக்கிறது. நாம் தான் எல்லாவற்றையும் நம்பும் அறிவிலிகளாயிற்றே? இதில் இந்திய மருத்துவ கழகத்தின் அங்கீகாரம் இதற்கு இருப்பதாக வேறு அந்த விளம்பரம் கூறுகிறது.
இது மட்டுமல்ல. இன்னும் பல காமெடிகளையும் நாம் பார்க்கிறோம். ஒரு கம்பெனியுடைய பெயிண்ட்டை வீட்டுக்கு அடித்தால் கிருமிகள் காணாமல் போய்விடும் என்று கூவுகிறார்கள். பல சோப்புகளும், கைகழுவும் திரவங்களும் கிருமிகளை அறவே ஒழித்துவிடும், இனி எல்லாம் சுகமே, எனவும் கதை கட்டுகிறார்கள்.
இவற்றுக்கு மருத்துவ அடிப்படையில் சான்றுகள் உள்ளதா?
முதலில் சில உண்மைகளை நாம் பார்க்க வேண்டும். நம் உடல் என்பது உள்ளுக்குள் கோடானுகோடி கிருமிகளை உள்ளடக்கிய ஒரு பிரபஞ்சம் ஆகும். நம் உடம்பில் 30 மில்லியன் செல்கள் இருக்கும் நேரத்தில் 40 மில்லியன் கிருமிகள் உணவுப்பாதையில் வசிக்கின்றன. எந்த அளவுக்கு நாம் திசுக்களின் தொகுப்போ அதே அளவு நாம் கிருமிகளின் தொகுப்பும் ஆகிறோம்.

எனவே கிருமிகளை அடியோடு அழிக்க நினைப்பது இயலாதது மட்டுமல்ல. ஆபத்தானதும் கூட. கிருமிகளை வேரறுக்கும் நம் முயற்சியில் நாம் சில நல்ல கிருமிகளையும் அழிக்க நேரிடும்.
நல்ல கிருமிகள் இல்லாத சூழலில் பொல்லாத கிருமிகள் வேகமாக வளர்ந்து நோய் தொற்று ஏற்படும் சூழல் கூட உருவாகலாம்.

அப்போது கைகழுவுதல் தேவையில்லையா என நீங்கள் கேட்கலாம். சுத்தம் மிக அவசியம். அதற்காக வீட்டை ஒரு ஆப்பரேஷன் தியேட்டர் போல மாற்ற எத்தனிப்பது அறிவீனம். கைகழுவ சாதாரண சோப்பு பயன்படுத்துதல் போதும். கிருமிநாசினி சோப்பு தேவையில்லை. கிருமி ஒழிப்பு பெயிண்ட் மற்றும் கிருமிநாசினி பல்பு என நமக்கு பல்பு தரும் போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம்.
‘எப்பொருள் யார் யார் வாய் கேட்கினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்குக்கு மதிப்பளித்து, உண்மையை நம்புவோம். பொய்களைப் புறந்தள்ளுவோம்.
கருத்து/தமிழாக்கம்
டாக்டர் ரமேஷ் பாபு

Dr. Ramesh Babu
MS, MCh, FRCS Glas, FRCS Edin, FRCS Paed, CCST (UK)
Professor & Senior consultant in Paediatric Urology,

Rio Children’s Hospital, Madurai